திருவள்ளூர்: தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு தமிழ்நாடு அரசும் தொண்டு நிறுவனங்களும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக போலீஸ் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் வடக்கு மண்டல தலைவியும், பிரஜோஷ் சாரிட்டியின் நிறுவனரும், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான டாக்டர் ஈவ்லின் ஏற்பாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கணவனை இழந்த பெண்களுக்கு, டாக்டர் ஜான் ஜோசப் பவுண்டேஷன் மற்றும் சனிடேஷன் பஸ்ட் தொண்டு நிறுவனங்கள் சார்பில், முகக்கவசம் மற்றும் அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் எஸ்.கே. துரைப்பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பெண்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்வில் பேசிய உட்கோட்ட துணை கண்காணிப்பாளர், "கரோனா தொற்று மனிதர்களைத் தேடி வரவில்லை, மனிதர்களே தலைவாழை இலை போட்டு கரோனாவை வரவழைத்து கொண்டனர். தற்போதைய அரசு குறைந்த நாட்களில் கரோனா தொற்றை சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது எனதெரிவித்தார்.
மேலும், மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியமானதாகும். குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை பாதுகாப்பாக வீட்டிற்கு உள்ளேயே வைத்திருக்க வேண்டும்" என அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சி அரசாங்கத்தின் ஆலோசனை படி தகுந்த இடைவெளியுடன் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் கபசுர குடிநீரும், முககவசமும், சானிடைசரும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: புனேவிலிருந்து சென்னை வந்தடைந்த 3.99 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்