கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பாப்பரம்பாக்கம் ஊராட்சி வாக்கு மையத்தில் கடந்த 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றபோது வாக்குப்பதிவு மையம் சூறையாடப்பட்டது. வாக்குப்பதிவு தினத்தன்று காலை 11:30 மணியளவில் பாமக வேட்பாளர்களின் ஆதராவளர்கள் வாக்கு மையத்திற்கு வந்து, முதலில் 83ஆவது பூத்தில் தகராறில் ஈடுபட்டனர். பின்னர், 84ஆவது பூத்தில் நுழைந்தவர்கள் அங்கிருந்த தேர்தல் அலுவலரை காலால் எட்டி உதைத்தனர்.
பின் அங்கிருந்த மேஜைகளை அடித்து நொறுக்கி, வாக்குச் சீட்டுக்கள் உட்பட ஆவணங்களை கிழித்தெறிந்தனர். பின் அங்கு பொதுமக்கள் வைத்திருந்த வாக்குப்பெட்டியை எடுத்து, வெளியே எடுத்துச் சென்றவர்கள் அதிலிருந்த பதிவான வாக்குச்சீட்டுகளை பள்ளி வளாகத்தில் தீயிட்டு கொளுத்தினர்.
இதன் காரணமாக அந்தப்பள்ளியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் வித்யா மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் உள்ளிட்டோர் வாக்குப்பதிவு மையத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி எண். 83 மற்றும் 84 ஆகியவற்றில் நாளை (30.12.2019 அன்று) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சுற்றுலாப் பயணிகள் வாகனத்தை வழிமறித்த சிறுத்தை - வீடியோ