திருவள்ளூர் என்ஜிஓ காலனியைச் சேர்ந்த பரந்தாமன் (45) என்பவர் ரயில்வே டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்துவந்தார். இவர், இன்று மாலை திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் சிறப்பு ரயில் பணிக்காக தனது வீட்டிலிருந்து ரயில் நிலையம் புறப்பட்டார்.
அங்கு, தண்டவாளத்தை கடந்து ரயிலில் ஏற சென்றபோது சென்னையிலிருந்து திருத்தணி நோக்கிச் சென்ற சரக்கு ரயில் மோதியது. இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த உறவினர்கள் பரந்தாமனின் உடலைப்பார்த்து கதறி அழுத சம்பவம் அங்கிருந்த போலீசார் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ. 20 லட்சம் கோடியில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் என்ன? கமல்ஹாசன் கேள்வி