கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் புறநகர் ரயில்களில் பயணம் செய்துவருகின்றனர்.
நேற்று (ஆக. 6) கும்மிடிப்பூண்டியிலிருந்து வேளச்சேரி நோக்கிச் சென்ற ரயிலை பொன்னேரி ரயில் நிலையத்தில் மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி பயணம் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை கடக்க இரண்டு மணி நேரம் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
குறித்த நேரத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் எனவும், உடனடியாக ரயில்வே துறை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ரயில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இரு மார்க்கங்களிலும் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
ரயில் நிலைய ஊழியர்களும் காவல் துறையினரும் பயணிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், பொன்னேரி எம்எல்ஏ துரை. சந்திரசேகர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த சென்னை கோட்ட ரயில்வே துணைப் பொது மேலாளர் சச்சின் புனீதா உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பும் முழு விவரமும்!