திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சியில் 144 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு புறம்போக்கு நிலங்களை தனியார் நிறுவனத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். அந்த நிலத்தை மீட்டு ஏழை மக்களுக்கு வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை வருவாய் துறை அலுவலர்களிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசு அலுவலர்கள் துணைபோவதாக குற்றஞ்சாட்டிய பொதுமக்கள், தனி நபர்களிடமிருக்கும் நிலத்தை மீட்கக் கோரி கோஷங்கள் எழுப்பியபடி ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த ஊத்துக்கோட்டை காவல் துறை உதவி ஆய்வாளர் ராக்கி குமாரி, வட்டாட்சியர் காந்திமதி, வருவாய் ஆய்வாளர் யுகேந்தர் ஆகியோர் கிராம மக்களை சமரசம் செய்தனர்.
மேலும், அரசு நிலங்களை மீட்டு ஆக்கிரமிப்பாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.