திருவள்ளூர்: ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜாநகரம் கிராமத்தில் அதே பகுதியில் வசித்து வரும் ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு சார்பில் இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், கிராமத்திற்கு அருகில் ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தைச் சார்ந்த மற்றொரு சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், பல ஆண்டுகளாக பயனாளிகளுக்கு சர்வே செய்து வழங்கப்படாத நிலை நீடித்து வந்தது.
இந்நிலையில், இலவச வீட்டு மனைகள் பெற்ற பயனாளிகள் மனிதவள ஆணையத்திடம் புகார் செய்திருந்தனர். புகாரின் பேரில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைகள் சர்வீஸ் செய்து வழங்க வேண்டும் என்று மனிதவள ஆணையம் உத்தரவிட்டது. அதன்பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்தணி கோட்டாட்சியர் சத்யா தலைமையில் வருவாய்த்துறையினர் காவல் துறை பாதுகாப்புடன் இலவச வீட்டு மனைகள் சர்வே செய்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இருப்பினும், நேற்று (ஜூன் 24) காலை திடீரென கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு இலவச வீட்டுமனை சர்வே செய்து அமைக்கப்பட்டிருந்த சர்வே கற்களை அகற்றினர். இச்சம்பவம் தொடர்பாக கிராமத்தைச் சேர்ந்த கவிகண்ணன், விநாயகம், ஜெயராமன் ஆகிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பள்ளிப்பட்டு சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் மாநில நெடுஞ்சாலையில் மரங்கள் வெட்டி சாய்த்தனர். பொதுமக்களுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்ற ஆர்கே பேட்டை வட்டாட்சியர் தமயந்தியை சிறைபிடித்த பொதுமக்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் பிடியில் சிக்கி 3 மணிநேரம் போராடிய வட்டாட்சியர் திடீரென மயக்கம் அடைந்தார். அவரை கடும் போராட்டத்திற்கு பிறகு பொதுமக்களிடமிருந்து மீட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மீது திடீரென பொதுமக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் 10-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பலத்த காயமடைந்தனர். மேலும், திடீரென மின்சாரம் தடை ஏற்பட்ட சூழ்நிலையில் சரமாரியாக கற்கள் கொண்டு வீசி தாக்குதல் சம்பவத்தால் காவல் துறையினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் ஆர்கேபேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. பரபரப்பான நிலையில் காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்ய பிரியா, திருவள்ளூர் எஸ்பி கல்யாண ஆகியோர் ஆர்கேபிடல் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கொலை மிரட்டல் - டிஜிபி அலுவலகத்தில் புகார்