திருவள்ளூர் மாவட்டம் சத்திரை கிராமத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, ஆண், பெண் உட்பட 252 வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா, சாலை, குடிநீர் வசதி உட்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் கஷ்டமான சூழலில் வாழ்ந்து வந்துள்ளனர். இது குறித்து அரசு அலுவலர்களிடம் மனு அளித்தும் எந்தப் பலனும் கிட்டவில்லை. இந்நிலையில், அப்பகுதி மக்களிடம் அரசியல் தலைவர்கள் வாக்களிக்கக் கோரி தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர்.
தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான கோரிக்கைகள் எதுவும் கிடைக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருவள்ளூர் தனி தொகுதி மக்களவை தேர்தலை புறக்கணிக்கும் வகையில் வாக்களிக்க மறுத்து தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேர்தல் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, 3 மணி வரை நடைபெற்ற பொதுமக்களின் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், அம்பேத்கர் நகரில் வசிக்கும் மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.