திருவள்ளூர் அருகே மேல்நல்லாத்தூர் கிராமத்தில் வாகன உதிரி பாகங்கள் உற்பத்திச் செய்யும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு அருகில் 32 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியைச் சார்ந்து 600 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.
இந்நிலையில், தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருள்கள் எடுத்துச் செல்ல ஏரியின் கரையை ஜேசிபி மூலம் உடைத்துள்ளது தொழிற்சாலை நிர்வாகம். இதனையறிந்த மேல்நல்லாத்தூர் கிராம மக்கள் ஜேசிபி வாகனத்தை சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் கங்காதரன் தவைமையிலான காவல்துறையினர் கரையை உடைத்த ஜேசிபி ஓட்டுநர், தொழிற்சாலையைச் சேர்ந்த இரண்டு பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் சொந்த ஜாமீன் அளித்து, சிறைப்பிடிக்கப்பட்ட ஜேசிபி வாகனத்தையும் விடிவித்துள்ளது காவல்துறை, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்நல்லாத்தூர், பட்டறை கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் தீப்பந்தம் ஏந்தியவாறு ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அவர்கள் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிக்கரையை உடைத்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கரையை உடைக்க பயன்படுத்திய ஜேசிபி வாகனத்தை மீண்டும் பறிமுதல் செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது.