திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் லாரி மோதிய விபத்தில் வினோத் குமார் என்பவர் படுகாயமடைந்து கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார்.
பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட வினோத்குமார் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். பொன்னேரி அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் ஒருவர் மட்டுமே இருந்ததாகவும், மூன்று மருத்துவர்கள் இல்லாததால் வினோத்குமார் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் பொன்னேரி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விபத்து ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வினோத்குமார் ஆம்புலன்ஸ் வசதிகூட இல்லாமல் ஆட்டோவில் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் உரிய நேரத்தில் அவருக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டிருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
மேலும் மூன்று மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டிய பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே இருந்ததால் வினோத்குமாரை உடனடியாக சிகிச்சை அளித்து காப்பாற்ற முடியாமல் போனதாகவும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி மருத்துவமனை வாயிலின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.