திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டு காலனி 14வது வார்டில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்கள் சுமார் 50 வருடங்களாக சுடுகாட்டிற்கு சாலை இல்லாமல் அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித மேல் நடவடிக்கை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று பகுஜன் சமாஜ் கட்சி தொகுதி செயலாளர் ராஜா என்பவரின் தாயார் சாந்தம்மாள் வயது 57 என்பவர் இயற்கை மரணம் அடைந்தார். அவரின் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு செல்ல தேவையான பாதை இல்லை. மேலும் கடந்த 50 வருடங்களாக இதே நிலை நீடிக்கிறது. இந்நிலையில் மேட்டுக் காலனி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாந்தம்மாவின் உடலை கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் வைத்து தொடர் போராட்டம் ஈடுபட்டனர்.
இதனால் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி வரும் வாகனங்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்களும் சாலையிலே ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போராட்டக் களத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் கண்ணன் சுடுகாட்டிற்கு சாலை அமைத்து தருவதாக போராட்டக்காரர்களிடம் வாக்குறுதி அளித்தார். வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை கைவிட்ட கிராம மக்களுடன் இணைந்து இறுதிச்சடங்கில் வட்டாட்சியர் கண்ணன் பங்கேற்றார். தொடர்ந்து சுடுகாட்டு பாதை அமைக்க சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: வீடியோ: 2ஆவது நாளாக கடும் பனிப்பொழிவு; திருவள்ளூரில் பொதுமக்கள் அவதி