திருவள்ளூர்: தொழிற்சாலையில் வெளிவரும் நச்சுப்புகையால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த நாகராஜாகண்டிகையில் தனியாருக்குச் சொந்தமான இரும்பு தாது மூலக்கூறு உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இது மிகவும் ஆபத்தான பட்டியலில் இடம்பெற்ற தொழிற்சாலைகளில் ஒன்றாகும்.
இந்த தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் நச்சு கலந்த கார்பன் மோனாக்சைடு புகை காற்றில் கலப்பதால் மூச்சுத்திணறல், இருமல், கண் எரிச்சல், வயிற்றுப்போக்கு, புற்றுநோய் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், நேற்று(மே. 17) நிறுவனத்தை சமூக இடைவெளியுடன் முற்றுகையிட்டு, மாசு கட்டுப்பாட்டுத் துறை அலுவலர்களை உடனடியாக ஆய்வு செய்யக்கோரி, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் அய்யனாரப்பன், தொழிற்சாலை நிர்வாகம், கிராம மக்களுடன் சமரசம் பேசி ஐந்து நாட்களுக்குள் சரி செய்து தருவதாக, உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இந்த போராட்டத்தின் பொதுமக்கள், தகுந்த இடைவெளியைப் பயன்படுத்தி, முகக் கவசம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.