திருவள்ளூர்: தே.மு.தி.க நிர்வாகி டி.ஜே ஜெகதீசனின் இல்லத் திருமண விழாவில், அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் பிரதமர் மோடி வருகையின் போது தி.மு.கவினர் கோபேக் மோடி (Go back Modi) மோடி என எதிர்ப்பை தெரிவித்தனர், அதேபோல் பீகாருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் செல்லும்போது அங்கு அவர்கள் கோபேக் ஸ்டாலின் (Go back Stalin) ஸ்டாலின் என தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். வினை விதைத்தால் வினை தான் முளைக்கும், விதை விதைத்தால் விதை முளைக்கும் என தி.மு.கவினரை சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அதேபோல் பீகாரில் நடைபெற்ற, எதிர்க்கட்சியினரின் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் விளைவு 2024 நாடாளுமன்ற தேர்தலில் தான் முடிவு செய்யும் என தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், அந்த கூட்டணியிலேயே பல முரண்பாடுகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க தனித்துப் போட்டியிடுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற உள்ள கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், அன்மையில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலிருந்து காவேரி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்படி என்றால் அரசு மருத்துவமனைகள் தரமற்றவை என இந்த தி.மு.க அரசு ஒப்புக் கொள்கிறதா என கேள்வி எழுப்பினார்.
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் மக்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும், உண்மையை வெளிக் கொண்டு வந்து மக்களை தெளிவுபடுத்த வேண்டியது அமலாக்க துறையின் கடமை எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தனதாக கூறப்படுவதாகவும், ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் டாஸ்மார்க் கொள்ளை, மணல் கொள்ளை, அதிகரித்துள்ளதாகவும் இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களுக்கு 10 லட்ச ரூபாய் இந்த அரசால் வழங்கப்படுகிறது, ஆனால் நியாயமான மக்களுக்கு காசு கிடையாது என திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதையும் படிங்க: Bakrid: பக்ரீத் பண்டிகையின் போது இடங்களில் ஆடு, மாடு வெட்ட தடைக்கோரி மனு.. நீதிமன்ற உத்தரவு என்ன?