திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அடுத்த நடுவீரப்பட்டு அன்னை தெரசா நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 22). இவர், கனரக வாகனங்களுக்கு டிங்கரிங் செய்யும் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் நடுவீரப்பட்டு, காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த சிவானந்தம் (வயது 20). வாகனங்களை வாட்டர் வாஷ் செய்யும் வேலை செய்து வந்தார்.
இருவரும் நசரத்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பூவிருந்தவல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, நசரத்பேட்டை அருகே, சாலையில் கிடந்த காகித அட்டை பறந்து எழுந்து, இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற சிவானந்தத்தின் முகத்தை மறைத்ததில், நிலைத் தடுமாறி இருவரும் சாலையில் விழுந்தனர். இதில் பின்னால் வேகமாக வந்த டேங்கர் லாரி, இருவர் மீதும் ஏறி இறங்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாய் உயிரிழந்தனர்.
இந்த விபத்து ஏற்பட்டபோது அருகே இருந்த கண்காணிப்புக் கேமராவில் விபத்துக் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும், விபத்து குறித்து பூவிருந்தவல்லி போக்குவரத்துக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து ஏற்பட்ட பகுதியில் பழைய பொருட்கள் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கொட்டப்படும் அட்டை சாலைக்கு பறந்து வந்ததால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட பழைய பொருட்கள் கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: திருவாரூரில் சட்டவிரோத செயல்களைத் தடுக்க ரோந்து வாகனங்கள்!