திருவள்ளுர் மாவட்டம் பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கத்தில் காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பப்போட்டி நடைபெற்றது. இப்போட்டிகள் சப் ஜூனியர்,ஜூனியர்,சீனியர், சூப்பர் சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில் நடத்தப்பட்டன.
இதில் காஞ்சி, திருவள்ளூர்,சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சிலம்பம் சுழற்றியது பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.
இறுதியாக வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத் தலைவரும்,இந்திய சிலம்பாட்ட சம்மேளனத் தலைவாருமான ராஜேந்திரன் IAS கலந்து கொண்டு பரிசுகளையும் ,சான்றுகளையும் வழங்கி சிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வெற்றி பெறும் வீரர்களுக்கு கல்வியில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாகவும், அதேபோல் ஒரு சில விளையாட்டு போட்டிகளுக்கு வழங்கப்படுவது போல் சிலம்பதிற்கும் மூன்று விழுக்காடு அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் ஆசிய கண்டத்தின் பாரம்பரிய கலையான சிலம்பக் கலையை கற்றுக்கொள்ள தற்போது உள்ள காலக்கட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.