திருவள்ளூர் காமராஜர் நகரில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கழகச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பலராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாயும், கரும்பு உள்ளிட்ட பொருட்களும் பயனாளிகளுக்கு வழங்கினர்.
இதில் மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள், கூட்டுறவுப் பதிவாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், வளர்ச்சித் திட்டங்களை திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படுத்தி வருவதாகவும், ஆவடி அடுத்த பட்டாபிராமில் புதிய தொழிற்நுட்ப பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் அடுத்த வாரம் பங்கேற்று தொடங்கி வைக்க உள்ளதாகவும், இதன் மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், உலகத்திற்கே எடுத்துக்காட்டாக மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கொண்டு வந்து அதை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தி. அந்த திட்டத்தை மக்களிடம் விரிவுபடுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தியதை நினைவுகூர்ந்து பேசினார்.
இதனையடுத்து 56 கோடியே 25 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பினை 5 லட்சத்து 62 ஆயிரத்து 583 பேருக்கு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தொடங்கி வைத்தனர்.