திருவள்ளூர் அருகே உள்ள பூங்கா நகர் நீலோத்பவ மலர் தெருவைச் சேர்ந்தவர் எத்திராஜ். கிரகப்பிரவேசத்திற்கு செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றபோது, அவரின் வீட்டின் பின்புறம் குதித்த இரு திருடர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
பின்னர், வீட்டில் இருந்த மடிக்கணினி, செல்ஃபோன் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இதுகுறித்து, எத்திராஜ் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
திருடர்களைப் பிடிக்க காவல் துணை கண்காணிப்பாளர் கங்காதரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. ஆய்வாளர் மகேஸ்வரி, உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்த போலீசார், லேப்டாப் மற்றும் செல்ஃபோன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
புகார் அளித்து 24 மணிநேரத்தில் காவல் துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு, கொள்ளையர்களைப் பிடித்துள்ளனர். அதேபோன்று ராஜாஜிபுரம் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் வீட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் திருடுபோன நகைகளையும் காவல் துறையினர் மீட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சினிமா பாணியில் பைக் திருட்டு - வேதனையில் முடிந்த சோதனை ஓட்டம்!