திருவள்ளூர் நகரைச் சுற்றி நெடுஞ்சாலைகளில் பகல், இரவு நேரங்களில் கால்நடைகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. இதனால் பல விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இரவு நேரத்தில் சாலையில் மாடுகள் படுத்திருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அதன் மீது மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
மேலும் லாரி பேருந்து போன்ற கனரக வாகனங்கள் மாடுகளின் மீது மோதுவதால் மாடுகள் உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின்பேரில் திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் ரவிக்குமார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கண்ணபிரான் ஆகியோரின் முயற்சியில் சாலையில் திரியும் மாடுகளின் கொம்புகளில் இரவு நேரத்தில் ஒளிரும் சிவப்பு வர்ணத்தை பூசினர். இதன் மூலம் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகன ஓட்டிகள் ஆகியோருக்கு தூரத்தில் வரும்போதே மாடுகள் இருப்பது தெளிவாகத் தெரியும் இதனால் விபத்துக்கள் பெருமளவு குறையும்.