திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கார்த்திகேயபுரம் கௌரி அம்மன் நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 28). இவர் ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவப்பிரியா (வயது 25) என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் எனவும், தங்களுக்குள் தகராறுதான் அதற்கு காரணம் என்றும் கஜேந்திரன் கூறியுள்ளார். ஆனால் சிவப்பிரியாவின் தாய் சுஜாதா தன் மகள் சாவில் மர்மம் உள்ளது என திருத்தணி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கஜேந்திரனிடம் விசாரணை நடத்தியபோது, அவர் கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் கூறியதாவது, ”சிவப்பிரியாவை நான் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பின்பும் அடிக்கடி தனது தாய் வீட்டிற்கு செல்லும்போது அவர் முதல் கணவர் மற்றும் குழந்தைகளை பார்த்து வந்தார்.
இது எனக்கு பிடிக்கவில்லை என்பதால் சம்பவத்தன்று தாய் வீட்டிற்கு செல்லக்கூடாது என சிவப்பிரியாவை கண்டித்தேன். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நான் தலையணையால் சிவப்பிரியா முகத்தில் அழுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.
அப்பொழுது என்னுடனிருந்த நண்பர் லோகேஷ் மற்றும் எனது தாய் விஜயா ஆகியோரின் யோசனையின் அடிப்படையில் சிவப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது போல் நாடகமாடினேன்” என அவர் கூறினார். இதையடுத்து, கொலை செய்த கஜேந்திரன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த லோகேஷ், விஜயா ஆகிய மூவரையும் காவல்துறையின்ர் கைது செய்தனர்.