திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த ஏரி வரத்து கால்வாயை ஆக்கிரமித்து தனிநபர் ஒருவர் தொழிற்சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது. இதனால், கிராம மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் ஏரி கால்வாய் ஆக்கிரமிக்கப்படுவதன் மூலம் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுதொடர்பாக கிராம மக்கள் சார்பில் வருவாய் துறையினரிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருத்தணி-சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஆக்கிரமிப்பை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பருப்பு, பாமாயில் கொள்முதலில் 1,480 கோடி ஊழல் - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு