திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு-ஆந்திர எல்லையான பள்ளிப்பட்டு அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் கனமழையால் அம்மம்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையில் நீர்வரத்து அதிகரிக்கும்போது சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.
அதன்படி, அணை நிரம்பியதால் நேற்றிரவு (நவ.15) 9 மணிக்கு அம்மம்பள்ளி அணையிலிருந்து விநாடிக்கு 950 கன அடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டது. அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் 8 கிலோமீட்டர் தூரத்தில் தமிழ்நாடு எல்லையான கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.
அதேபோன்று பள்ளிப்பட்டு அடுத்த சொரக்காப்பேட்டை, சாமந்தவாடா, நெடியம், விடியங்காடு ஆகிய ஊர்களின் வழியாக உபரி நீர் வந்துகொண்டிருப்பதால் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின. இதுதொடர்பாக திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தும், பொதுமக்கள் தரைப்பாலத்தில் நடந்து செல்கின்றனர்.
வெள்ள அபாயத்தை உணராமல் சிறுவர்கள் மீன்பிடித்து விளையாடுகின்றனர். காவல் துறை நடவடிக்கை எடுத்தும் மக்கள் பொருட்படுத்தாமல் பாலத்தில் செல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: 'கடின உழைப்பு இருந்தால் வெற்றி நிச்சயம்'