திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் ஊராட்சியில் பாமக கொடிக்கம்பத்தில் இருந்த கொடி நேற்று முன்தினம் (ஜூன் 09) காலை தீவைத்து எரிக்கப்பட்டு இருப்பதைக்கண்ட அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்து அதிகளவில் திரண்டுள்ளனர்.
தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி காவல் துறையினர் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வுசெய்தபோது, நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் கொடிக்கு தீவைப்பதும், அது சரியாக எரியாததால் கீழே காய்ந்து கிடந்த தென்னை மட்டைகளை எடுத்து தீவைத்து கொடியைக் கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட பாமகவினர், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்ய வலியுறுத்தி பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு கொடியை எரித்த நபர்களைத் தேடிவருகின்றனர்.
பாமக கொடி எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்தப் பகுதியில் ஏராளமான பாமகவினர் குவிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதற்காகக் காவல் துறையினர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து தீவைத்து எரிக்கப்பட்ட கொடியை அகற்றி பாமகவினர் புதிய கொடியை ஏற்றினார்கள்.
இதையும் படிங்க: தமிழ்நாடு கடும் எதிர்ப்பு: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு!