திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள சிவன் கோயில் அருகில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சிதிலமடைந்து உள்ளதாகவும் அதனை சீரமைத்து சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்றும் அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி அதிகை முத்தரசி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது குறித்து, உரிய பதில் அளிக்க மாவட்ட ஆட்சியர்,கல்வித் துறை அலுவலர்கள் ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் பள்ளிக்கு மதிய உணவு எடுத்துச் சென்ற பெற்றோர்களை பள்ளியின் தலைமையாசிரியை பள்ளியின் வெளிப்புறத்தில் தடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து மாணவிகளின் பெற்றோர்கள் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு குழந்தைகளுடன் அமர்ந்து குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கல்வித் துறை அலுவலர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்த பின் பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க : தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்தாய்வில் போராட்டம்!