திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்ட வெங்கத்தூர் ஊராட்சி உள்பட வெங்கத்தூர் காலனி பகுதியில் மாவட்ட ஆட்சியர், ஒன்றிய நிர்வாகத்தினர் ஆகியோர் ஒரு இடத்தை தேர்வுசெய்தனர். அந்த இடத்தில் வெங்கத்தூர் ஊராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம்பிரித்து உரமாக மாற்ற வேண்டும் என திடக்கழிவு மேலாண்மை நிலையம் அமைக்க அனுமதியளிக்கப்பட்டது.
இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் அந்த இடத்தில் குப்பைகளைக் கொட்ட சென்றபோது வெங்கத்தூர் காலனி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து குப்பைகளைக் கொட்டவிடாமல் வாகனங்களைத் திருப்பியனுப்பினர். இது குறித்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் காவல் துறைப் பாதுகாப்பு கேட்டு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
மனு கொடுத்து நான்கு நாள்களாகியும் பாதுகாப்புக்காக காவல் துறையினர் யாரும் வராததால் ஊராட்சி குப்பைகளைக் கொட்ட முடியாமல் ஆங்காங்கே குப்பைகள் தேங்கியுள்ளன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக் கேடும் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கரோனா வைரஸ் காரணமாக மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், ஊராட்சி முழுவதும் உள்ள குப்பைகள் தேங்கியிருப்பதால் ஊராட்சி நிர்வாகமும் மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனால் காவல் துறையினரைக் கண்டித்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் வெங்கத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் உள்பட ஊராட்சி நிர்வாகிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வெளிநாடுகளிலிருந்த சென்னை வந்த 56 பேருக்கு கரோனா அறிகுறியா? - மருத்துவமனையில் அனுமதி