திருவள்ளூர் மாவட்டம், பெருமாநல்லூர் கூட்டுச் சாலையில் இருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பள்ளிப்பட்டிலிருந்து வேலூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதனால் இருவரும் பலத்த காயமடைந்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸூக்கு அழைத்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் பரிசோதித்ததில், ஏற்கனவே இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறை விசாரணை மேற்கொண்டதில், இறந்தவர்கள் இருவரும் பள்ளிப்பட்டியை அடுத்த கோண சமுத்திரத்தைச் சேர்ந்த கார்த்தி(29), ரவிக்குமார்(50) என்ற விவசாயிகள் என்றும், இருவரும் பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்திற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வந்தபோது பேருந்து மோதி உயிரிழந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்திற்குக் காரணமான அரசுப் பேருந்து ஓட்டுநர் அன்பரசு பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இரண்டு விவசாயிகள் உயிரிழந்தது அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க:நள்ளிரவில் திடீர் தீ விபத்து, மூவர் படுகாயம்