திருவள்ளூர் மாவட்ட மக்களின் குறைகளை மனுக்களாகப் பெறும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்,’கடந்த 29ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் எழிலரசி என்பவர், ராணுவ வீரரான தன் தந்தையும், தாயும் ஆகிய இருவரும் உயிரிழந்ததாகத் தெரிவித்தார். தனது குடும்பத்திற்கு உதவி செய்ய பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டேன். அன்று இரவுக்குள் அரசு சார்பில் இழப்பீடு தொகை உடனடியாக அவரது வங்கிக்கணக்கிற்கு வந்துவிட்டது. இழப்பீட்டு தொகையை பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்ததுடன், எனக்கு நன்றியும் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு, ஸ்டாலின் நாடகமாடுகிறார், பொய் பரப்புரை செய்கிறார் என ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
நான் பொய் பரப்புரை செய்கிறேன் என்றால் என்மீது அதிமுக தொழில் நுட்ப பிரிவு வழக்கு தொடரடட்டும். என்னிடம் ஆதாரம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகாலமாக தமிழ்நாடு ‘ஊழல் தமிழ்நாடு’ஆக உள்ளது. முதல் ஐந்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மக்களுக்கு பயன்படாத ஆட்சியை தந்தார்.
இதனிடையே ஜெயலலிதா சிறைக்கு சென்றபோது பன்னீர்செல்வம் பொம்மை ஆட்சியை நடத்தி வந்தார். வருகிற தேர்தலில் திமுக, அதிமுக ஆட்சிக்கு மட்டுமல்ல; பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகிய 2 பேருடைய அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆட்சியாக திமுகவின் ஆட்சி அமையும். மாஃபா பாண்டியராஜன், இந்தியை வளர்க்கும் அமைச்சர். தேர்தலில் அதிமுக தோற்றால் மீண்டும் பாஜகவில் இணைவார்’ என்றார்.
இதையும் படிங்க:'புதுச்சேரியோட நிலைமையை மாத்த பாஜகவுக்கு ஆதரவு கொடுங்க’: ஜெ.பி.நட்டா