திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயத்தில் வேலையாள்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து, குறித்த காலத்தில் பண்ணைப்பயிர் சாகுபடிசெய்திட ஏதுவாகவும், விவசாயிகளின் நிகர லாபத்தினை உயர்த்திடவும், வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம் தமிழ்நாட்டில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் பெருமளவில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 2020-21ஆம் நடப்பு நிதியாண்டில் திருவள்ளுர் மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானியவிலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், மானியவிலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல் முதலான பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் உழவன் செயலியில் பதிவுசெய்து, மத்திய அரசின் இணையத்தளம் www.agrimachinery.nic.in மூலம் நேரடி நன்மை பரிமாற்றத்தின் (DBT) வழிமுறைகளின் படி மானியம் பெற்றுவருகின்றனர். இதன்படி அதிகபட்சமாக டிராக்டர்களுக்கு 5 லட்சம் ரூபாயும், நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரங்களுக்கு 5 லட்சம் ரூபாயும், ரோட்டவேட்டர் என்று அழைக்கக்கூடிய சுழற்கலப்பைகளுக்கு 50 ஆயிரம் ரூபாய், விசையால் களையெடுக்கும் கருவிகளுக்கு 63 ஆயிரம் ரூபாய், பவர் டில்லருக்கு 85 ஆயிரம் ரூபாய் அல்லது அவற்றின் மொத்த விலையில் 50 விழுக்காடு, இவற்றில் எதுகுறைவோ, அத்தொகை மானியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு நடப்பாண்டில் வழங்கப்படுகிறது.
இதர விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில் 40 விழுக்காடு இவற்றில் எதுகுறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்களை 25 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைத்திட ஏதுவாக 40 விழுக்காடு மானிய அடிப்படையில் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.
மொத்த மானியத் தொகையில் பொதுப் பிரிவினருக்கு 5 லட்சம் ரூபாயும், ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு 3 லட்சம் ரூபாயும் பிடித்தம் செய்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மானிய இருப்பு நிதிக்கணக்கில் இரண்டு வருடங்களுக்கு இருப்பில் வைக்கப்படும்.
மீதித் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இரண்டு வருடங்களுக்குப் பின் பயனாளிக்கு வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சரிபார்த்தப் பிறகு மானிய இருப்புத்தொகை திரும்ப வேளாண் இயந்திரங்கள் வாடகை மைய பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
விவசாயிகளுக்கு எளிய வகையில் உதவிடும் பொருட்டு, மானிய இருப்பு நிதிக்கணக்கில் மானியத் தொகையினை இருப்பாக வைப்பதற்கு மாற்றாக பொதுப்பிரிவு விவசாயிகள் 5 லட்சம் ரூபாயும், ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பிரிவு விவசாயிகள் 3 லட்சம் ரூபாயும் வைப்பு நிதியாக வழங்கிடும் பட்சத்தில், அவ்வைப்பு நிதி செயற்பொறியாளர் பெயரில் பிணைவைப்பு செய்யப்பட்டு இரண்டு வருடங்களுக்கு இருப்பில் வைக்கப்படும்.
இரண்டு வருடங்களுக்குப் பின் பயனாளிக்கு வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் சரிபார்த்தப் பிறகு, மானிய இருப்புத் தொகை திரும்ப வேளாண் இயந்திரங்கள் வாடகை மைய பயனாளியின் பிணை வைப்பிலிருந்து சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் அவர்களால் விடுவிக்கப்படும்.
கரும்பு சாகுபடிக்கேற்ற வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் நிறுவ கரும்பு சாகுபடிக்கேற்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள், விவசாய கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், பஞ்சாயத்துகுழுக்கள் போன்றோர் மூலம் ஒவ்வொன்றும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், 40 விழுக்காடு மானிய உதவியுடன் நிறுவப்பட்டு, கரும்பு விவசாயிகளுக்கு குறைந்தவாடகையில் வழங்கப்படுகிறது.
வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றிட முதலாவதாக விவசாயிகள், உழவன் செயலியில் (Uzhavan App) பதிவு செய்திடவேண்டும். பின்னர் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான www.agrimachinery.nic.in-ல் இணைக்கப்படும். விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளையும் ஒப்புதல் வழங்கப்பட்ட முகவரையும் (Dealer) தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யலாம்.
விவசாயிகள் முகவரின் விற்பனை விலையை பேச்சுவார்த்தை மூலம் பேரம் பேசி குறைத்திடலாம். குறைக்கப்பட்ட விலைக்குரிய மானியம் இணையதளத்திலேயே கணக்கிடப்படும். குறிப்பிட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இலக்கு முடிவுற்றப் பின்னர் விவசாயிகள் அதே இயந்திரம் அல்லது கருவியை தேர்வு செய்தால், அவர் 1,2,3 என எண்ணிடப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்படுவர்.
ஏற்கனவே 2019-20ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட மூதுரிமை விண்ணப்பங்கள் நடப்பு ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எனவே, இவ்வாண்டிற்கு விண்ணப்பங்கள் புதிதாக பதிவு செய்யப்படவேண்டும். ஒரு நிதியாண்டில் தனக்குத் தேவைப்படும் ஏதாவது இரண்டு வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளை மட்டுமே மானிய விலையில் விவசாயிகள் வாங்கிட இயலும்.
அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அதே வகையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானியவிலையில் வாங்கிட இயலும். உதவி செயற் பொறியாளர், உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் ஆகியோர் விவசாயிகளின் நிலத்திற்கு நேரில் சென்று விவசாயிகள் வாங்கிய வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை ஆய்வு செய்வர். மேலும் விவசாயி மற்றும் விற்பனை செய்த முகவரால் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து விவரங்கள் மற்றும் ஆவணங்கள் வேளாண்மை பொறியியல்துறை அலுவலர்களால் சரிபார்க்கப்படும்.
அதன் பின்னர், விவசாயிக்கு வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட விவசாயி மற்றும் ஆய்வு அலுவலர் ஆகியோருடன் கூடிய புகைப்படத்தினை இணையதளத்தில் வேளாண்மைப் பொறியியல்துறையின் ஆய்வு அலுவலரால் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், சரிபார்ப்பு பட்டியல் மற்றும் அலுவலரின் குறிப்புரையும் 10 நாள்களுக்குள் வேளாண்மை பொறியியல்துறை அலுவலர்களால் பதிவேற்றம் செய்யப்படும்.
மேற்குறிப்பிட்ட ஆய்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர், இறுதியாக விவசாயியின் வங்கி கணக்கில் உரிய மானியமானது ஆய்வு முடிந்த 10 நாள்களுக்குள் வரவு வைக்கப்படும். வேளாண் இயந்திர மயமாக்கும் திட்டத்தில் தனிப்பட்ட வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற்றிட ஏதுவாக 18 டிராக்டர்கள், 4 நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரங்கள், 5 ரோட்டவேட்டர் என்று அழைக்கக்கூடிய சுழற்கலப்பைகள், 2 விசையால் களையெடுக்கும் கருவிகள், 4 பவர்டில்லர்கள் வாங்கி கொள்ள நடப்பாண்டில் 67 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும், 2 வாடகை மையங்கள் அமைக்க 20 லட்சம் ரூபாயும் இம்மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டும்.
தனிப்பட்ட விவசாயிகளுக்குரிய வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கு வட்டாரவாரியான இலக்கு ஆகஸ்ட் 26ஆம் தேதியில் www.agrimachinery.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. இதில் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கிட மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் தாமாகவே முன்வந்து முன்னுரிமை அடிப்படையில் பதிவுசெய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனவே விவசாயிகள் தங்களுக்கு அருகாமையிலுள்ள உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, திருவள்ளுர், திருத்தணி மற்றும் பொன்னேரி வேளாண்மைப் பொறியியல்துறை அலுவலகத்தினை அணுகி மேலும் விவரங்களைப் பெற்று இத்திட்டத்தின் மூலம் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கேட்டுக்கொண்டார்.