ஆந்திரா மாநிலம் கடப்பா திரி பகுதியிலிருந்து 10 டன் வெங்காய மூட்டைகளுடன் தமிழ்நாடு நோக்கி லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. அதிகாலை மூன்று மணி அளவில் திருவள்ளூர் அருகேயுள்ள அமைந்துள்ள சுங்கச் சாவடி அருகே இந்த லாரி வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லாரி ஓட்டுநர் ஜில்லன், லாரி உரிமையாளர் பாட்ஷா ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர். ஆனால், லாரியில் இருந்த வெங்காய மூட்டைகள் சாலையில் சிதறியதால் வெங்காயங்கள் வீணாகின. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் நகர காவல் துறையினர், நடத்திய விசாரணையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வெங்காயம் ஏற்றிவந்த லாரிதான் விபத்தில் சிக்கியிருப்பது தெரியவந்தது.
கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை உச்சத்தில் உள்ள நிலையில், ஓட்டுநரின் கவனக்குறைவால் நேர்ந்த இந்த விபத்தில் கிலோ கணக்கிலான வெங்காயங்கள் வீணாகியுள்ளது. மேலும், லாரி உரிமையாளரின் முயற்சியால் சாலையில் கொட்டிய வெங்காயங்களில் நன்றாக உள்ள பகுதியை மட்டும் சேகரித்து கோயம்பேடு சந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவு!