திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த காரனோடையில் நாகவள்ளி என்பவரது இடத்தில் புதிய கடை கட்டுவதற்காக கடக்கால் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜேசிபி இயந்திரம் உதவியுடன் 4 தொழிலாளர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
வில்லாளன் என்ற தொழிலாளி உள்ளே இறங்கி பள்ளத்தில் இருந்து மண்ணை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மேலிருந்து அவர் மீது மண், கல் சரிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த வில்லாளனை மீட்ட சக தொழிலாளர்கள் பாடியநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இதனிடையே மருத்துவமனையில் உயிரிழந்த தொழிலாளியை படம் பிடிக்க சென்ற செய்தியாளரை படம் எடுக்க கூடாது என மருத்துவமனை ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் மண் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.