தமிழ்நாடு ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்றை மடக்கி சோதனையிட்டனர். அதில் பண்டல் பண்டலாக பணம், வெள்ளிக்கட்டிகள், வெள்ளி கொலுசுகள் இருந்தன.
உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் பணம், வெள்ளிக்கட்டிகள், வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அதைக் கொண்டு நான்கு பேரிடம் விசாரணை செய்ததில் அவர்கள் பெயர் அசோக், சதீஷ்குமார், ரஹ்மான், ஷேக் அன்சாரி என்பது மட்டும் தெரியவந்துள்ளது.
மேலும் அவர்கள் காவல் துறையினரிடம் ஆந்திர மாநிலம் ஷீராளாவில் இருந்து சென்னைக்கு நகை வாங்குவதற்காக பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். எனினும் பணத்திற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் ஹவாலா பணமா? என சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து நான்கு பேரையும் ஆரம்பாக்கம் காவல் துறையினர் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலர்களிடம் ஒப்படைப்பதற்காக அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க: போதைப்பொருள் கடத்தல் - சிக்கிய மூன்று பேர் கைது!