திருவள்ளூர், ஆர்.கே.பேட்டை வட்டம், வங்கனூர் வேலன்கண்டிகை கிராமத்தைச்சேர்ந்த முதியவர் சின்ன வயல்(80), திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இன்று (ஆக.21) குறைதீர்ப்பு நாள் கூட்ட அலுவலக நுழைவுவாயிலில் திடீரென அவர் தான் கொண்டுவந்த மண்ணெண்ணெயினை எடுத்து தீக்குளிக்க முயன்றதை அடுத்து, போலீசார் தடுத்து அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுத்தனர்.
பின் செய்தியாளர்களிடத்தில் சின்ன வயல் பேசுகையில், 'எனது மனைவி முனியம்மாள். எங்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். நால்வருக்கும் திருமணமான நிலையில், சிறிய மகன் குமார் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறேன்.
இந்நிலையில் திடீரென எனது பெரிய மகன் சண்முகத்தின் மகள் தாரணி திடீரென காரில் அழைத்துச்சென்று சில தினங்கள் நன்றாகப் பராமரித்து வந்தார். கண்பார்வை சரியில்லாத என்னிடம் திடீரென, ஏதோ ஒரு ஆவணத்தைக் காட்டி கையெழுத்திடச் சொன்னார். படிக்கத் தெரியாத நான் என்ன எழுதி இருக்கிறது என்று தெரியாமல் கையெழுத்து இட்டேன்.
பின்னர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் எனது சொத்தை பாகப்பிரிவினை செய்வதற்காக சார்பதிவாளர் அலுவலகம் சென்றபோது, சார் பதிவாளர் அலுவலகத்தில் எனது சொத்துகள் ஏற்கனவே, எனது பெரிய மகன் சண்முகத்தின் மகளான தாரணி பெயரில் பதிவாகியுள்ளது எனத் தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். இதனையடுத்து அவர்களிடம் கேட்டதற்கு, நீங்கள் தான் எனது பெயரில் சொத்துகளை எழுதிக்கொடுத்ததாகவும்; மேலும் இந்த சொத்துகளில் யாருக்கும் பாகப்பிரிவினை செய்து கொடுக்க முடியாது எனவும்; உங்களால் முடிந்ததைப் பாருங்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும் வீட்டில் இருக்க வேண்டாம் எனவும்; வீட்டில் இருந்து துரத்தியதால், தற்பொழுது வேறு வழி இல்லாமல் எனது சிறிய மகன் குமார் வீட்டின் பராமரிப்பில் இருக்கிறேன். எனவே, ஏமாற்றி வாங்கிய சொத்துகளை உடனடியாக ஆட்சியர் மீட்டுத் தர ஏற்கனவே மனு அளித்திருந்தேன்.
இந்நிலையில் மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்ததால் மன உளைச்சல் அடைந்த சின்ன வயல் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றேன் என்றார், பரிதாபமாக அந்த முதியவர்.
மேலும், மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் மனு அளிக்கும் மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என உறுதி அளித்துள்ள மாவட்ட நிர்வாகம்; மனு அளிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் விடப்பட்டதே, இந்த தற்கொலை முயற்சிக்கான காரணம் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அமித்ஷாவின் செருப்புகளை கையில் எடுத்துச்சென்ற பாஜக தலைவர்... இணையதளத்தில் சர்ச்சை