திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது பிஞ்சிவாக்கம் கிராமம். அதனை சுற்றி கடம்பத்தூர், பேரம்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன.
இந்நிலையில் கடம்பத்தூர், பேரம்பாக்கம் நெடுஞ்சாலையிலிருந்து பிஞ்சிவாக்கம் கிராமத்திற்கு செல்லும் வழியில் கூவம் ஆறு அமைந்துள்ளது. அங்கு மழை காலத்தின்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம், கிராம மக்கள் 10 கிலோ மீட்டர்வரை சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலையில் இருந்ததாக வேதனை தெரிவித்தனர். மேலும் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும் என 20 ஆண்டுகளாக, கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட மதிப்பீடு செய்யப்பட்டு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி சுமார் 10 கோடியே 30 ஆயிரம் ரூபாய் செலவில் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து 7 மீட்டர் அகலம், 150 மீட்டர் நீளம் கொண்ட தரைப் பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பிறகு கடம்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி சுதாகர் தேசிய நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குனர் சிவக்குமார், கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர் சூரகாபுரம், சுதாகர் ஆகியோர் தரைப்பாலத்தை ரிப்பன் வெட்டி பயன்பாட்டுக்கு திறந்துவைத்தனர்.