திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் ஊராட்சியில் 'அதிமுகவை நிராகரிப்போம்' என்ற திமுகவின் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது மு.க.ஸ்டாலின் பேசுகையில், "இன்னும் நான்கு மாதங்களில் மக்கள் நினைத்தது அனைத்தும் நிறைவேறும். திமுக ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயலலிதாவின் இறப்பில் மர்மம் உள்ளது என நீதி விசாரணை கேட்ட பன்னீர்செல்வம் தற்போது அமைதி காத்து வருகிறார்.
நெசவாளர்களின் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். நெசவு செய்பவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இனி முதலமைச்சரை எடப்பாடி பழனிசாமி என்று அழைக்காதீர்கள். எடப்பாடி பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இனி எடப்பாடி பழனிசாமி என்பதை முதலமைச்சர் பழனிசாமி என்று அனைவரும் அழைப்போம்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு
முதலமைச்சர் தனது தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் மரியாதை தெரியாமல் நீ வா போ என பேசி வருவது கட்சி நிர்வாகிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் எப்பொழுதும் மரியாதையுடன்தான் நடந்து கொள்வோம். முன்னாள் தலைவர் கலைஞர் அப்படித்தான் எங்களை வளர்த்தார்.
பொள்ளாச்சியில் நான்கு வருடங்களாக 250 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அவர்களை மிரட்டி காணொலி பதிவு செய்த நிகழ்வில் அதிமுகவினர் மகன்கள் சம்பந்தப்பட்டிருப்பது குறித்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த கிராம சபை கூட்டத்தில், திரளான பெண்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சியினர், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ’திமுக உடையாமல் பார்த்து கொள்ளுங்கள் ஸ்டாலின்’