’அலட்சிய அலுவலர் பணியிட மாற்றம்’ - அமைச்சர் சா.மு.நாசர் நடவடிக்கை - திருவள்ளூர் அண்மைச் செய்திகள்
திருவள்ளூர் : பள்ளிப்பட்டு பேரூராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியமாக செயல்பட்ட செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அறிவுறுத்தலின் பேரில், செயல் அலுவலரை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வீடு, வீடாக பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறன.
இந்நிலையில் திருத்தணி, திருவள்ளூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மேற்கொள்ளப்படும் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் திருத்தணியில் நடைபெற்றது. இதில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆய்வுக் கூட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் வாரியாக நடத்தப்பட்ட ஆய்வில், பெரும்பாலான பகுதிகளில் தடுப்பூசி போடுவதில் அலுவலர்கள் மெத்தனமாக செயல்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து ஆய்வுக் கூட்டத்தில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பேசுகையில், ”பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பதினைந்து நாட்களுக்குள் தடுப்பூசி போடும் பணியை முடிக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா நோய் பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
குறிப்பாக பள்ளிப்பட்டு பேரூராட்சியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் பேரூராட்சி செயல் அலுவலர், மருத்துவர்கள் அலட்சியமாக செயல்படுகின்றனர். அலட்சியமாக செயல்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அதனடிப்படையில் பள்ளிப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமியை, ஆரணிக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : வைரலாகும் சிவாங்கியின் பாடல்!