திருவள்ளூர்: நிவர் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில், தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பூவிருந்தவல்லி, பருத்திப்பட்டு ஏரி நீர் சுத்திகரிப்பு நிலையம், திருநின்றவூர் பேரூராட்சி ஸ்ரீராம் நகர், திருநின்றவூர் பேரூராட்சி, ஈசா பெரிய ஏரி ஆகிய பகுதிகளை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் நேரில் பார்வையிட்டார்.
மேலும், தாழ்வானப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துச்சாமி, உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) வில்லியம் ஏசுதாஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
முன்னதாக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தைப் பார்வையிட்டார். 36 அடி ஆழம் கொண்ட பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் தற்போது 30.5 அடி நீர் உள்ளது. 32 அடி மட்டுமே தாங்கக்கூடிய சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து இரண்டு மூன்று நாட்களில் தண்ணீர் திறந்துவிடப்படவுள்ள நிலையில் நீர்த்தேக்கத்தின் மதகுகள் அனைத்தும் சீராக உள்ளதா என நகராட்சி நிர்வாகங்களின் ஆணையர் பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
தொடர்ச்சியாக அப்பகுதியில் பெய்துவரும் கனமழையாலும், கிருஷ்ணா கால்வாய் மூலம் 1,000கன அடிநீர் நீர்த்தேக்கத்திற்கு வந்துகொண்டிருப்பதாலும் பொதுமக்கள் யாரும் அணையின் அருகில் குளிக்கவோ, புகைப்படங்கள் எடுக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிவர் புயல்: நிவாரண உதவிகள் வழங்க தொண்டர்களுக்கு அதிமுக தலைமைக் கழகம் அறிவுறுத்தல்