மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று திருவேற்காட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் மலர்தூவி அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதையடுத்து இந்திமொழி குறித்த கேள்விக்கு அவர், ’’உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்காக ஒரு இந்தியமொழி, மற்றும் ஒரு அயலகமொழி கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது 2014 இல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த முடிவு. இருமொழிக் கொள்கைக்கு எந்த மாற்றமும் இருக்காது என அவர் கூறியுள்ளார். இதை தேவையில்லாமல் அரசியலாக்க வேண்டாம் என தங்கம் தென்னரசுவுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். மொழிவெறுப்பை வைத்து அரசியல் செய்தால் அதனை தமிழக இளைஞர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
புதுமொழியை கற்றுக் கொள்வதாலும் தமிழ் வளர்ச்சி தடைபடும் என்ற அபத்தமான கருத்து தங்கம் தென்னரசுவுக்கு இருக்காது என நினைக்கிறேன். அரசின் கொள்கை நிலைப்பாட்டிற்கு திமுகவும் துனை நிற்கும் என கோரிக்கை வைக்கிறேன் என தெரிவித்தார்.
இதையும் படிக்க: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - மாணவியின் தாயாருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!