திருவள்ளூர்: திருத்தணி அருகேயுள்ள அம்மையார்குப்பத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (26). கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிவந்த அவர், அரசு வேலை காலியாக இருப்பதாக ஃபேஸ்புக் பதிவு ஒன்றைப் பார்த்துள்ளார். பின்பு, அதிலிருந்த தொடர்பு எண்ணை தொடர்புகொண்டுள்ளார்.
அப்போது, அந்த நபரோ கே.கே. நகரில் உள்ள இஎஸ்இ மருத்துவமனையில் வேலை வாங்கித்தருவதாக ஆசைவார்த்தைகூறி தனது வங்கிக்கணக்கு முதற்கட்டமாக ரூ.54 ஆயிரத்து 350 செலுத்துமாறு தெரிவித்துள்ளார். வெங்கடாசலமும் அந்த நபரின் வங்கிக்கணக்கில் அந்தப்பணத்தை செலுத்தியுள்ளார். அதன்பிறகு மோசடி நபர் போனை ஸ்விட்ச் ஆப் செய்து வைத்திருக்கிறார்.
இதில், சந்தேகம் அடைந்த வெங்கடாசலம் உடனே திருவள்ளூர் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப்புகாரின் அடிப்படையில், திருவள்ளூர் சைபர் கிரைம் காவலர்கள் அவருடைய தொடர்பு எண்ணை வைத்து தேடியதில், மோசடி நபர் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த பாலாஜி (36) என்பது தெரியவந்தது.
உடனடியாக அவரது வீட்டிற்கு விரைந்து அவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், 2019ஆம் ஆண்டு முதல் பல்வேறு போலியான பணி ஆணையை அளித்து பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
அவரிடமிருந்து போலியான பணி ஆணைகள், முத்திரைகள், இரண்டு செல்போன்கள், வங்கி கணக்குப் புத்தகங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை திருத்தணி கிளைச் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆசிரியர் திட்டியதால் மாடியிலிருந்து விழுந்து மாணவி தற்கொலை?