திருவள்ளூவர் மாவட்டம் அருகே உள்ள பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (28). இவர் ஏலச்சீட்டு நடத்துவதாகக் கூறி காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரேஷ்மா என்ற பெண்ணிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார். அதேபோல், பல பெண்களிடமிருந்து 70 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பெண்களிடம் வாங்கிய பணம் அனைத்தையும் எடுத்துகொண்டு மோகன் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து, பணம் கொடுத்த பெண்கள் அனைவரும் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது வீடு பூட்டியிருந்தது. இதனால் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது மோகன் ஒரு வாரமாக காணவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
![ஏலச்சீட்டு மோசடி ஒருவர் கைது Man arrested for bidding fraud திருவள்ளூர் Thiruvallur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4352953_thiruvallur-1.bmp)
பின்னர் ஏலச்சீட்டு கட்டி ஏமாந்த ரேஷ்மா, பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி காவலர்கள் பெங்களூருவுக்கு விரைந்துசென்றனர்.
அப்போது, மோகன் கடந்த ஒருமாத காலமாக பெங்களூருவில் வீடு வாடகைக்கு எடுத்து தலைமறைவாக தங்கியிருந்தது தெரியவந்ததையடுத்து கைது செய்தனர். மேலும் அவரை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.