திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர், பாலசுப்பிரமணி. இவரின் மகன் பத்மநாதன் (25). தனியார் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.
இவர், அடிக்கடி ஆந்திர மாநிலம் சென்று வருவது வழக்கம். ஆந்திர மாநிலம் சென்று வரும்போது இவர் லாரியில் கஞ்சாவை கடத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் ஓட்டுநர் பத்மநாதனை நோட்டம் விட ஆரம்பித்தார், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமணன்.
இந்நிலையில், இன்று (மே 20) மாலை அவர் இலங்கை அகதிகள் முகாமிலுள்ள பெரிய ஆலமரத்தின் கீழ் அமர்ந்து சுமார் 3 கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சாவை சிறுசிறு பொட்டலங்களாக மடிப்பதைக் காவல் துறையினர் கண்டறிந்தனர்.
இதையடுத்து, அவரை கையும் களவுமாக மடக்கிப் பிடித்த காவல் துறையினர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கும்மிடிப்பூண்டி நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்திய பின்னர், பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்தனர்.