வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, குன்றத்தூர், மாங்காடு ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களிடம் அடையாளம் தெரியாத நபர்கள் லிஃப்ட் கேட்பது போல் நடித்து மோட்டார் இருசக்கர வாகனங்களில் பயணித்து, திடீரென வாகன ஓட்டுநர்களைத் தாக்கி மோட்டார் சைக்கிள் திருடி செல்வது அதிகளவில் நடைபெற்று வந்தது. இதுகுறித்து மாங்காடு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிட்டிபாபு தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தார்.
இந்நிலையில் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த அருண்(21), என்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், இரவு நேரங்களில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் காவல் துறையினர் நடமாட்டம் அதிகம் இருக்காது என்பதால் லிஃப்ட் கேட்பது போல் நடித்து, பின்னால் அமர்ந்து சென்று சிறிது தூரம் சென்றவுடன் வாகன ஓட்டிகளைத் தலையில் தாக்கியும், கத்தியை காட்டி மிரட்டியும் இறக்கிவிட்டு அவர்களது மோட்டார் சைக்கிளை திருடி சென்று விடுவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, அவரிடமிருந்து மூன்று மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: