திருவள்ளூர்: இன்று (மே25) திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். மேலும், இந்த கூட்டத்தில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்த அமைப்பின் தலைவருமான ஜெயக்குமார் பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமாரிடம் பேரறிவாளன் விடுதலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, “முன்னாள் பாரதப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பலரை உச்ச நீதிமன்றம் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து அவர்களுக்குத் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தப் பங்கும் கிடையாது.
இது முழுக்க முழுக்க அரசியலமைப்புச் சாசனத்தின்படி தண்டனை வழங்கப்பட்டது. ஒரு குற்றத்திற்கு ஒரு தண்டனை கொடுக்கப்பட்டு, அந்த தண்டனை ஒரு முறை தான் குறைக்கப்படும். மீண்டும் மீண்டும் சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி அதை தவறாகப் பயன்படுத்தி கவர்னர் சரியாக செயல்படவில்லை எனக்கூறி எந்த நீதிமன்றம் தண்டனை வழங்கியதோ, அதே நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.
உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் இரண்டாம் தரமாக நடந்துகொள்ளக்கூடாது. தாங்கள் கொடுத்த தண்டனையை அவர்களே தவறு என்று சொன்னால் அந்த நீதிபதிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டாமா? ஒரு குற்றத்திற்கு எத்தனை முறை நீதிபதி தண்டனை வழங்குவது? கீழ் கோர்ட்டில் தவறு என்று சொன்னால், மேல் கோர்ட்டில் அது சரி என்று சொல்கிறார்கள்.
இந்தியாவில் சட்டத்துறை கேலிக்கூத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கியதில் ஒரு நீதிபதி குற்றவாளி என்றும், மற்றொரு நீதிபதி நிரபராதி என்றும் தீர்ப்பு அளித்திருப்பதால் இந்த 2 நீதிபதிகளில் யார் அளித்த தீர்ப்பு சரி? மேலும், தவறான நீதியை வழங்குகின்ற நீதிபதிகளும் தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் பேசுவேன்” எனப் பதிலளித்தார்.
இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!