திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பலத்த பாதுகாப்புடன் கோட்டாட்சியர் விசாரணைக்காக இன்று (டிச.17) வேனில் அழைத்துச் செல்லப்பட்டார்.
சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கம் தனியார் ஓட்டலில் தங்கியிருந்தபோது பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை காவல்துறையினர் கைது செய்து பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளைச்சிறையில் கடந்த 14 ஆம் தேதி அடைத்தனர் .
சித்ராவின் தற்கொலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், அவரது நண்பர்கள் உறவினர்களிடம் பல கட்ட விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், இன்று (டிசம்பர் 17) ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணைக்காக பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட ஹேம்நாத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிறைத் துறையினருக்கு ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் தரப்பில் நோட்டீஸ் அனுப்பபட்டது.
ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணை:
இந்த நிலையில், சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட் ஆயுதப்படை ஆய்வாளர் பரந்தாமன், உதவி ஆய்வாளர் ஆதிராஜன் உள்ளிட்ட ஒன்பது பேர் கொண்ட ஆயுதப்படை காவலர்கள் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்புடன் பொன்னேரி கிளைச் சிறைக்கு இன்று அதிகாலை வந்தனர். பின்னர், சிறை அலுவலர்களிடம் அழைத்துச் செல்வதற்கான கடவுச்சீட்டை வழங்கி, பலத்த பாதுகாப்புடன் ஹேம்நாத்தை ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணைக்காக காலை 6:30 மணிக்கு வேனில் அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு பின்னர் ஹேம்நாத் மீண்டும் பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.
இதையும் படிங்க: மன அழுத்தம் காரணமாக சித்ரா தற்கொலை செய்து கொண்டார் - மாமனார் ரவிச்சந்திரன்