திருவள்ளூர்: பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் தொகுதி வேட்பாளராக, திருத்தணி மைக்கேல் தாஸ் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ஆதரவாளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டிவந்தார்.
மேலும், திருவள்ளூர் தொகுதி முழுவதும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மைக்கேல் தாஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளருக்கு பிரமாண்ட வரவேற்பு
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் சித்தம்பாக்கம் ஊராட்சியில் தேர்தல் பரப்புரைக்காக வருகைபுரிந்த, திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் மைக்கேல் தாஸுக்கு திருவள்ளூர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர், பிவிஎஃப் சித்தம் ராஜேஷ் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
செண்டை மேளம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவித்து கிரீடம் வைத்து, ராஜ மரியாதை அளிக்கப்பட்டது.
அதிமுக, திமுக போட்டியிடும் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி
சித்தம்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த சைமன், புல்லட் தேவா, வினோத், சபரி, விஜயகாந்த், நாகராஜ் மற்றும் சித்தம்பாக்கம் பகுஜன் சமாஜ் கட்சியின் நண்பர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளரை ஊர்வலமாக அழைத்துக்கொண்டு, வீடு வீடாக நடந்துசென்று வாக்கு சேகரித்தனர். அப்போது பிரபல வில்லன் நடிகர் தீனாவும் பகுஜன் கட்சி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அதிமுக, திமுக என இரண்டு பெரிய கட்சிகள் நேரடியாகப் போட்டியிடும் தொகுதியில், பகுஜன் சமாஜ் கட்சிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் என பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பாஜக கூட்டணி வருமான வரித்துறையை தவறாக பயன்படுத்துகிறது- திமுக குற்றஞ்சாட்டு