திருவள்ளூர் மாவட்டம், பென்னலூர்பேட்டை அருகே உள்ள அல்லிகுழி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் அவரது கொட்டகையில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், இவருக்குச் சொந்தமான எட்டு ஆடுகளும், அதே பகுதியைச் சேர்ந்த கந்தன் என்பவருக்குச் சொந்தமான இரண்டு மாடுகளும் மேய்ச்சலுக்கு சென்று விட்டு வந்து, தீனி உண்டு தண்ணீர் அருந்தியுள்ளன.
தொடர்ந்து, சாப்பிட்ட சிறிது நேரத்தில் அடுத்தடுத்து வாயில் நுரை தள்ளிய நிலையில் மயக்கமடைந்து சாய்ந்தன. உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், எட்டு ஆடுகளும், இரண்டு மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன. இது குறித்து பென்னலூர்பேட்டை காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கால்நடை மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்த பின்னரே ஆடுகளும் மாடுகளும் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும். அடுத்தடுத்து திடீரென ஆடு, மாடுகள் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கால்நடைத் துறை அலுவலர்களும் கால்நடைகள் உயிரிழப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.