திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் அதானி குழுமத்தின் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. கனரக வாகனங்கள் எளிதாக வந்து செல்வதற்காக நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இருமுறை போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். இதுகுறித்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு வருவாய் அலுவலர்கள் விடுத்த அழைப்பை ஏற்று பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த காட்டுப்பள்ளி கிராம மக்களுடன் வட்டாட்சியர் வில்சன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் நான்கு வழி சாலை அமைத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் மாற்று வீட்டுமனை, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும், மாற்று இடத்தில் தாங்கள் குடிபெயரும் வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை பரிசீலனை செய்வதாக அலுவலர்கள் உறுதியளித்ததையடுத்து கிராம மக்கள் தற்காலிகமாக போராட்டத்தை விலக்கி கொண்டனர். மேலும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.