போரூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் கோபிநாத், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த அசோக் ஆகிய இருவரும் நேற்றிரவு (ஜன. 4) காவல் வாகனத்தில் போரூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
இவர்கள் போரூர் மங்களா நகரிலிருந்து மவுண்ட் - பூந்தமல்லி சாலைக்கு வரும்போது கட்டுப்பாட்டை இழந்த கார் போரூர் சக்தி நகரின் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.
அதேவேகத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், காரின் மீது மோதி நின்றது. இதில் அங்கு நின்றிருந்த பொதுமக்கள் நான்கு பேருக்கும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிந்து வலியால் துடித்தனர்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோய் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுபற்றி போரூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போரூர் உதவி ஆணையர் சம்பத், காவல் ஆய்வாளர்கள் சங்கரநாராயணன், சீனிவாசன் ஆகியோர் விரைந்துவந்து விபத்தில் சிக்கிய வாகனத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காவல் வாகனம் மோதி காயமடைந்தவர்கள் தினேஷ்குமார், அஜித்குமார், கஸ்தூரி, மனோஜ்குமார் என்பது தெரியவந்தது.
போரூர் மங்களா நகரிலிருந்து பிரதான சாலைக்கு வரும்பொழுது சாலையில் வேகமாக வந்த லாரி காவல் வாகனத்தில் மோதுவதுபோல் வந்ததால் வேகமாகக் காரை திருப்ப முயன்றபோது விபத்து ஏற்பட்டதாகவும், காவல் வாகனத்தில் பிரேக் பழுதடைந்ததாகவும் கூறப்படுகிறது.
விபத்துக்கான முழுக் காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர். காவல் வாகனம் வேகமாக வருவதைக் கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடிவிட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க: பேருந்தை முந்த முயற்சித்த வேன் கவிழ்ந்து விபத்து!