திருவள்ளூர்: பொன்னேரி அருகே இரு தரப்பு மீனவர்களிடையே மீன்பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் மீனவர்கள் இரண்டு தரப்பாகப் பிரிந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
மதுரஆண்டிகுப்பம் பகுதி மீனவக் கிராமங்களில் இளங்கோ, சங்கர், தவமணி, ராஜா செல்வம் உள்ளிட்ட மீனவர் பிரிவுகளுக்கு இடையே அடிக்கடி பிரச்னை இருந்து வந்துள்ளது. மேலும், தவமணி தரப்பில் உள்ள குறிப்பிட்ட 37 குடும்பங்களை மீன்பிடிக்க அனுமதிக்காமல் சங்கர் தரப்பினர் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வருவதாக தவமணி தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக, மீன்பிடிக்கச் செல்லாமல் வறுமையில் வாடி வருவதால் உடனடியாக தவமணி தரப்பிடமிருந்து, தனியாக தொழில் செய்ய தங்களை அனுமதிக்க வேண்டும் என அரசு அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டுள்ளனர்.
மீனவக் குடும்பங்கள் தர்ணா
இதுகுறித்து பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர், இரு தரப்பினரை அழைத்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையிலும் இதுவரை சங்கர் தரப்பினர் தவமணி தரப்பினை மிரட்டி வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், மீன்பிடிக்கச் செல்லாமல் வறுமையில் வாடும் குடும்பத்தினரை காப்பாற்ற உடனடியாக ஆட்சியர் தலையிட்டு பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆட்சியர் அலுவலகம் நுழைவுவாயிலில் 30-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களது ரேஷன்கார்டு, ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றைத் தரையில் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை
இதனையடுத்து ஆட்சியர் அலுவலகம் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். பின்னர் இதைத் தொடர்ந்து, சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தையில் நாளை (மார்ச் 3) சங்கர் மற்றும் தவமணி தரப்பினர் இடையே சமாதானப் பேச்சுவார்த்தையில் ஆட்சியர் ஈடுபட்டு சுமுகத்தீர்வு ஏற்படும் என்று அலுவலர்கள் உறுதி அளித்ததின் அடிப்படையில் தவமணி தரப்பு மீனவர்கள் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும், நாளை இந்த விவகாரத்தில் ஆட்சியர் தலையிட்டு பிரச்னைக்கு உரிய தீர்வு காணாவிட்டால் தலைமைச் செயலகம் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தவமணி தரப்பு மீனவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'மனித மலம் அள்ள வற்புறுத்தினால் தண்டனை' - தேசிய தூய்மைப்பணியாளர் ஆணையர் தகவல்