திருவள்ளூர்: திருவேற்காட்டில் பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் மணி (70). இவருக்கு கோபாலகிருஷ்ணன், மோகன், குணசேகரன் என மூன்று மகன்கள் உள்ளனர். மூன்று பேருக்கும் தந்தை மணி திருமணம் செய்து வைத்ததோடு, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வீடு கட்டியும் கொடுத்து வாழ வைத்துள்ளார்.
தந்தையை மிரட்டிய மகன்கள்
இந்நிலையில், வீட்டில் சிறப்பாக பார்த்துக் கொள்வதாகக்கூறி முதியவர் மணியின் ஓய்வூதியத்தை வாங்கி மூன்று மகன்களும் செலவழித்ததோடு, அவரது சேமிப்பு பணத்தையும் பிடுங்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், முதியவருக்கு சொந்தமான நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தையும், கொலை செய்து விடுவதாக மிரட்டி கையெழுத்து பெற்று அபகரித்துள்ளனர்.
ஆட்சியரிடம் முதியவர் மனு
தொடர்ந்து, மகன்கள் மூவரும் சேர்ந்து தந்தையை வீட்டிலேயே கட்டிப்போட்டு, சரமாரியாக தாக்கியும் வீட்டை விட்டு வெளியே செல்லாதவாறு துன்புறுத்தியும் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கிருந்து தப்பி வெளியே வந்த மணி, கோயில், குளம் எனத் தங்கி தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.
தொடர்ந்து, பெற்ற மகன்களே இது போன்ற செயல்களில் ஈடுபட்டதால், மனமுடைந்த தந்தை, மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தனது சொத்தை மீட்டுத் தரக்கோரியும் நேற்று (ஜூலை 29) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவைப் பெற்றுகொண்ட ஆட்சியர், மகன்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தந்தையிடம் உறுதியளித்துள்ளார்.
முதியவர் பேட்டி
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த முதியவர் மணி, “பெற்ற மகன்களுக்காக சம்பாதித்த சொத்தை நானே அவர்களிடம் கொடுத்திருப்பேன். ஆனால், என்னைத் தாக்கி, கொலை செய்துவிடுவதாக மிரட்டி சொத்தை அபகரித்துள்ளனர்.
அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் இனி வேறெங்கும் நடக்காதவாறு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: முதியோர் உதவித் தொகை வாங்கித் தருவதாக சொத்து அபகரிப்பு!