திருவள்ளூர் மாவட்டம், மாதர்பாக்கம் அடுத்துள்ள நேமலூர் பகுதியில் சந்திரன் என்ற விவசாயி மாடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போரை மூடுவதற்காக வெளியில் சென்றுள்ளார். அப்போது இடியுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்த நிலையில், இடி தாக்கியதில் விவசாயி சந்திரன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பாதிரிவேடு காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோன்று பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியில், இன்று அதிகாலையில் இடி, மின்னல் மழையுடன் கூடிய சூறைக்காற்று வீசியது. இதனால் மரங்களும், செடிகளும், மின்கம்பங்களும் சாய்ந்தன.
பழவேற்காடு பகுதிக்குச் செல்லும் உயர் மின் அழுத்தக் கம்பங்களும் பழவேற்காடு கோட்டை குப்பம் ஊராட்சிக்குச் செல்லும் உயர் மின் அழுத்தக் கம்பங்களும் அடியுடன் சாய்ந்து, மின்கம்பங்கள் அறுந்து விழுந்தன. இதனால் பழவேற்காடு பகுதி முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது.
இதையடுத்து பழவேற்காடு ஊராட்சி மன்றத் தலைவர் மாலதி சரவணன், கோட்டக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் சம்பத் ஆகியோர் அளித்தப் புகாரின் பேரில், பழவேற்காடு மின் கோட்ட அலுவலகத்தில் மின்சாரத் துறையினர் நேரடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடனடியாக பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க... இடி தாக்கி பெண் உயிரிழப்பு!