கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்களின் எல்லையோரப் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் ஒருபகுதியாக, சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தமிழ்நாடு-ஆந்திரா எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுவருகின்றன. தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவிற்குச் செல்லவும், அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வரவும் அனுமதிமறுக்கப்படுகிறது.
பால், மருந்து, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இதனிடையே, ஆரம்பாக்கம் அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் சீனர்கள் போல தோற்றமளிக்கும் மூன்று பேர் வந்தனர்.
அவர்களுக்கு மருத்துவர்கள் மேற்கொண்ட கண்டறிதல் சோதனையில், காய்ச்சல் உள்பட அறிகுறிகள் எதுவும் இன்றி நலமாக இருப்பதாகத் தெரிவித்தனர். தொடர்ந்து, அவர்களின் ஆவணங்கள் சோதனைசெய்யப்பட்டன.
இந்தச் சோதனையில், அம்மூவரும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், இந்தியாவில் தங்கி சில திட்டங்களை எடுத்து அவர்கள் தொழில் செய்துவருவதும் தெரியவந்தது. கடவுச்சீட்டு, நுழைவு இசைவு உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆதார் அடையாள அட்டையும் அவர்கள் வைத்திருந்ததால் சோதனைக்குப் பிறகு காவல் துறையினர் அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: திருவள்ளூரில் வெளிநாட்டவருக்கு மருத்துவ பரிசோதனை