திருவள்ளூர்: பள்ளிப்பட்டு, திருத்தணி வட்டங்களில் உள்ள பாண்டறவேடு, கீளப்பாடி, மேளப்பூடி, பெருமாநல்லூர், அகூர் உட்பட 10-க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் கொண்டா ரெட்டி சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பழங்குடியினர் சாதி சான்று வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். பழங்குடியினர் சான்று தொடர்பாக தற்போது கூர்நோக்கி கமிட்டி பரிசீலனையில் உள்ளது.
இந்நிலையில், கீளப்பூடி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி ரெட்டி(75) என்ற முதியவர் நேற்று (ஜூலை 4) அதிகாலை பள்ளிப்பட்டு தாசில்தார் அலுவலக வாசலில் தற்கொலை செய்துக் கொண்டார். முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த கடிதம் மற்றும் மஞ்சள் நிற பையை போலீசார் கைப்பற்றினர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் பல ஆண்டுகளாக கொண்டா ரெட்டி சமுதாய மக்கள், பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் கேட்டு போராட்டம் நடத்தி வருவதாகவும், அதை கிடைக்காத விரக்தியில் அவர் தற்கொலை செய்துக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே முதியவர் திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தின் போது பிளேடால் கழுத்து அறுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசு மதுபானக்கடையில் ரூ.1.20 லட்சம் திருட்டு - போலீஸ் விசாரணை